Sunday, February 10, 2013

பருத்தித்துறை ஓடக்கரைத் தோசை சாப்பிட வாரீர்களா?

எங்கள் எள்ளுப் பாட்டன் காலத்திலிருந்தே பருத்தித்துறையூரில் ஓடக்கரை மிகவும் பிரசித்தம் பெற்றிருந்தது. மிக ஜனநெருக்கடியான இடமாக இருந்திருக்கிறது.


அந் நாட்களில் பருத்தித்துறை துறைமுகம் பிரசித்த துறைமுகமாக விளங்கியது. கப்பல் வாணிபம் நடைபெற்றது. அதனால் அக்காலத்தில் உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் கிட்டங்கிகள் பலவும் இந்நகரில் இருந்தன.


நாங்களும்  சிறுவயதில் மாவுக் கப்பல்கள் இத் துறைமுகத்தில் வந்து இறக்குவதை  கண்டிருக்கின்றோம்.

முன்னர் பர்மா இந்தியாவிலிருந்து தேக்கு மரங்கள் கப்பல்களில் கொண்டு வரப்பட்டு கோயில் கட்டுமான வேலைகளுக்கு பயன்படுத்தியதாக எங்கள் பாட்டி கூறியிருக்கிறார்.

பருத்தித்துறை துறைமுகம் தற்போது அழிந்த நிலையில்.

வீட்டு ஓடுகளும் இந்தியாவிலிருந்து கப்பல்களில் வந்து இறங்கியதாகச் சொன்னார். இந்திய, சீனப் பட்டுகளும் கொண்டுவரப் பட்டு விற்கப்பட்டன.  இந்நகர் வியாபார நகராக இருந்ததால் இந் நகரை அண்டியுள்ள பிரதேசங்களிலிருந்து தொழிலுக்காக பல மக்களும் இங்கு வந்து குடியேறினார்கள்.

இந்நாட்களில் படித்த சிலர் சிங்கப்பூர், பர்மா நாடுகளில் தொழில் புரியவும் சென்றார்கள். அதனால் அந்நாட்டு உணவு முறைகளையும் நாளடைவில் இந்நகர மக்கள் அறிந்திருந்தனர்.

அம்முறையில் பலவகை உணவுகளும் அறிமுகமாயின.


நகரத்தில் கூலிக்காக வேலை செய்பவர்களுக்கு உணவுத் தேவை ஏற்பட்ட வேளைகளில் வீடுகள் தோறும் சிறிய தட்டிகள் வைத்து உணவு விற்பனை செய்யும் வழக்கம் இத்தெருக்களில் ஏற்படலாயிற்று.

இங்கு தயாரிக்கும் உணவுகள் மிகவும் ருசிமிக்கதாக இருந்தது. அவற்றின் சுவையோ ஆகா சொல்லி மாளாது. அதனால் சுற்று வட்டாரத்தில் ஏறத்தாள ஆறு மைலகள் தூர வரையுள்ள மக்கள் இங்கு வந்து உணவை வாங்கிச் செல்லும் வழக்கம் உருவாயிற்று.

விசேடமாக இவர்கள் தயாரிக்கும் முட்டை அப்பம், வெள்ளை அப்பம், தோசை, பொரிவிளாங்காய், வெள்ளை முறுக்கு, இனிப்பு சிப்ஸ், தட்டை வடை,சீடை, கச்சான் தட்டு  இன்னும் பலப்பல சொல்லலாம். சீனாவிலிருந்து வரும் புட்டரிசி என்ற ஒரு அரிசியை ஆவியில் வேக வைத்து தேங்காய் சர்க்கரை சேர்த்து உண்பார்கள். இது மிகவும் சுவையாக இருக்கும் என எனது அம்மா சொல்லுவார்.

நகரைச் சுற்றியுள்ள மக்கள் தமது வாழ்க்கையில் ஓரிரு தடவையேனும் இவ்வுணவை ருசிக்காமல் இருந்திருக்கமாட்டார்கள்.

மாலையானால் உணவு வாங்குவதற்காக சுற்று வட்டாரங்களிலிருந்து மக்கள் நடையாகவும், சைக்கிள்களிலும் ஓடக்கரையை நோக்கிச் செல்வதைக் காணலாம். சிறிய அகலம் குறைந்த அந்தப் பாதையால் செல்வோர் தொகை கணக்கில் அடங்காது. சைக்கிள்கள் அவசரமாக விரைந்தால் ஒன்றுடன் ஒன்று இடிபட்டுக் கிடக்கும். மிகவும் நிதானமாகவே இங்கு செல்லல் வேண்டும்.

அண்டிய ஊர்களில் காச்சல் வந்தவர்களுக்கு காச்சல் மாறியதும் பத்திய உணவாக முதல் முதல் கொடுப்பது இங்கு செய்யப்படும் வெள்ளை அப்பத்தையே. இது எங்கள் வீட்டிலும் நடக்கும். பலதடவைகள் நடந்திருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து ஒரு மைல் தூரத்தில் உள்ளது இவ்விடம்.

விசேடமாக இவர்கள் தயாரிக்கும் தோசை அதற்கான மூன்று நான்கு வகை அம்மியில் அரைத்த சட்னி,சம்பல் ,கறிவகைகள், பொடி சம்பல், என அனைத்தும் சுவையானது.



மெத்தென்ற தோசை அதன்மேல் பச்சை மிளகாய் சட்னி, அதன்மேல்தோசை சிவப்புக் காரச் சட்னி,


அதன்மேல்தோசை காரக்கறி, பொடி சம்பல், என மாற்றி மாற்றிஅடுக்கிக் கொடுப்பார்கள். கால ஓட்டத்தில்  இப்பொழுது ஓரிரு வீடுகளில் மட்டும் தட்டி வைத்து விற்பதைக் காணலாம்.


சம்பல் ஊறி மெத்தென இருக்கும். தோசை சாப்பிட வீட்டில் போட்டி நடக்கும்.
விசேடமாக தோசைக்கு ஒரு காரக்கறி வைப்பார்கள்.



காரத்தில் கண்ணில் நீர்வடிய நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு சாப்பிடுவதிலும் சுவை இருக்கத்தான் செய்தது. நானும் சாப்பிட்டிருக்கின்றேன். இவ்வகைக் கறி வீட்டிலும் செய்திருக்கின்றேன். உடலுக்கு அதிக காரம் கூடாது என்பதால் இப்பொழுது காரத்தைக் குறைத்துச் செய்வேன்.


மெத்தென்ற தோசை
 
தேவையானவை

உழுந்து - 1 கப்
வெள்ளைப் பச்சை அரிசி - 2 கப்
புளுங்கல் அரிசி - ½ கப்
வெந்தயம் - 2 ரீ ஸ்பூன்

அரிசியை 4-5 மணிநேரம் ஊற வைத்து உரலில் இட்டு இடித்து அரித்து மாவாக எடுங்கள்.


அரிக்கும்போது வரும் குறுணியில் 2 பிடியை எடுத்துவையுங்கள். அடுப்பில் 2 ரம்ளர் நீரை வைத்து நீர் கொதிக்க குறுணியை போட்டு கஞ்சி காய்ச்சி ஆற வைத்துவிடுங்கள்.

ஆட்டுக் கல்லில் அரைத்து எடுத்த உழுந்து மாவுடன் இடித்த மா, கஞ்சி அனைத்தையும் கலந்து தோசை மா பதத்தில் கரைத்து வையுங்கள்.
சுடும்போது உப்புக் கலந்து சுடலாம்.


மிகவும் மெதுவான மெத்தென்ற தோசை கிடைக்கும்.
இதை நாங்கள் இக்காலத்திற்கு ஏற்ப கிரைண்டர் அல்லது மிக்ஸியில் செய்து கொள்ளலாம்.


பச்சை மிளகாய் காரக்கறி

தேவையானவை

பச்சை மிளகாய் - 15 - 20
சின்ன வெங்காயம் - 1 கப்
தேங்காய் நீர் - ½ கப் ( மிளகாய் காரத்தை குறைப்பதற்காக )
உப்பு புளி - தேவையான அளவு

தாளிக்க
கடுகு - ½ ரீ ஸ்பூன்
சோம்பு -¼ ரீ ஸ்பூன்
வெந்தயம் - ¼  ரீ ஸ்பூன்
கறிவேற்பிலை - சிறிதளவு
ஓயில் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை 

மிளகாயை சிறியதாக வட்டமாக வெட்டுங்கள.;

வெங்காயத்தையும்  சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.
தேங்காய் நீரில் புளியைக் கரைத்து வையுங்கள்.

ஓயிலில் பொருட்களை தாளித்து பச்சை மிளகாய், வெங்காயம் கொட்டி வதக்குங்கள்.

உப்புக் கலந்து வதக்குங்கள்.

நன்கு வதங்கிய பின் புளித் தண்ணியை ஊற்றி கிளறி நன்கு கொதிக்க விட்டு இறக்கிவிடுங்கள்.

கொதிக்கும்போதே காரம் மூக்கைப் பிடுங்கும்.



மிளகாய் காரத்துடன் பச்சை மிளகாய் காரக் கறி தயாராகிவிட்டது.



குறிப்பு - பச்சை மிளகாய்க்குப் பதில் குடமிளகாய் பயன்படுத்தினால்; காரம் இருக்காது.தேங்காய்   நீரைத் தவிர்த்து விடுங்கள்.

எனது தோசைப் பதிவுகள்

அம்மா சுட்ட தோசைகள்

அம்மா சுட்ட தோசை 2

-மாதேவி-