Sunday, March 18, 2012

நல்ல உணவும் குப்பை உணவும்


உயிரினம்  வாழ்வதற்கு உணவும் நீரும் அத்தியாவசியமானவை. காற்றைப் பற்றிச் சொல்லவில்லை என நிகைக்காதீர்கள். அதையும் சேர்த்துக் கொள்வோம். ஆனால் அது சமையலில் சேராதே!

இவை யாவும் அவசியமாக இருந்தபோதும் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு எவ்வகை உணவுகளை உண்ண வேண்டும் என்ற கேள்வி பலர் மனங்களிலும் எழுகின்றது.

நாவுக்கு சுவை தரக் கூடிய உணவுகளையே மனம் நாடி நிற்கும். இனிப்பு,காரம் உப்புக் கலந்த,  எண்ணெயில் பொரித்த சுவையான உணவுவகைகளை விரும்பி உள்ளே தள்ளிக் கொண்டிருக்க யாருக்குத்தான் ஆசையில்லை.

கொழுப்பு நிறைந்த பிட்ஷா, பர்ஹர், சிப்ஸ், பேஸ்டி, கேக், டோனட் உணவுக் கூடங்களை மக்கள் அலையாக மோதுவதைக் காண்கின்றோம்.

குப்பை உணவு junk food என்ற சொல்லை இப்பொழுது ஆங்கிலத்தில் உபயோகிக்கிறார்கள். ஆனால் குப்பையை அள்ளி வாயில் போடுவதில்தான் பலருக்கு நாட்டம்.

குப்பை உணவு

குப்பை உணவு என்றால் என்ன?

போஷாக்கு மிகவும் குறைவான உணவுகள் அவை.
  • அதே நேரம் அவற்றில் மிக அதிகமாக எண்ணெய், கொழுப்பு, இனிப்பு கலந்திருக்கும் 
  • அவற்றின் கலோரிப் பெறுமானம் மிக அதிகமாக இருக்கும். 
  • உப்பும் பொதுவாக அவற்றில் மிக அதிகமாகச் சேர்க்கப்பட்டிருக்கும். 
  • ஆனால் போஷாக்குக் கூறுகளான புரதம், விற்றமின்கள், தாதுப் பொருட்கள் மிகக் குறைவாகவே இருக்கும்.

இவ்வகையான கொழுப்பு உணவுகளை அதிகம் உண்பதால் ஏற்படும் விளைவுகளையும் அறிந்துதான் இருக்கின்றோம்.

இருந்தும் இந்த நாக்கு எம்மை விட்டபாடில்லை. கணக்கு வழக்கின்றி இவற்றை விழுங்கிக் கொண்டே இருக்கிறது.

ஏன் எமது நாக்குகள் இவற்றை விட்டுவிடாது துரத்திப் பிடிக்கின்றன என்பதை பின்னர் பார்ப்போம்.


நாம் தினசரி உணவுகளை எந்த விகிதத்தில் உண்ண வேண்டும் என்பதை உணவு பிரமிட் சுட்டிக் காட்டுகிறது.

தானியங்களினால் உணவு அதுவும் முக்கியமாக தீட்டி தவிடு நீக்கப்படாத தானியங்களினாலான உணவு அதிகம் சாப்பிட வேண்டியதாகிறது. தினசரி 6 சேர்விங் என்கிறார்கள். இவை முக்கியமாக மாச்சத்தைத் தருகின்றன.

அடுத்து காய்கறிகளும் பழங்களும் கிட்டத்தற்ற அதற்கு இணையாண அளவு உட்கொள்ளப்பட வேண்டியவையாகும். அதாவது காய்கறிகள் 3 சேர்விங் மற்றும் பழ வகைகள் 2 சேர்விங் என மொத்தம் 5 ஆகிறது. இவற்றில் இருந்து பெருமளவு நார்ப்பொருளும், விற்றமின் கனியங்கள் கிடைக்கின்றன.

புரதங்களைப் பொறுத்த வரையில் பால், தயிர், யோர்கட். சீஸ் போன்றவை 3 சேர்விங், மீன், இறைச்சி, கோழியிறைச்சி, பருப்பு பயறு கடலை போன்றவையும், விதைகளுமாக 2 சேர்விங்  உட்கொள்ள வேண்டும்.



ஆனால் மிகக் குறைந்த அளவு எடுக்க வேண்டியவை கொழுப்பு, எண்ணெய், இனிப்புகளாகும். இந்த குறைந்தளவு எடுக்க வேண்டிய உணவின் கூறுகளே குப்பை உணவுகளில் அதிகம் கலந்துள்ளன என்பதைக் கவனிக்க வேண்டும்.

எல்லாவற்றிலும் அதிகமாக எடுக்க வேண்டியது நீர். அதாவது சாதாரண நீர் மட்டுமே.

மென்பானம், குளிர்பானம், மதுபானங்கள் போன்றவை இதில் அடங்கவில்லை என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்.

அடிமையாகும் நாக்கு

ஏன் எமது மனமும் நாக்கும் வேண்டாத உணவு வகைகளுக்கு அடிமையாகின்றன?

இது பற்றி 2008 ல்  Paul Johnson and Paul Kenny ஆகியோர் ஒரு ஆய்வு செய்தார்கள். அதன்படி குப்பை உணவுகள் எனப்படுபவை எமது மூளையின் கலங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி அதை நாடச் செய்கிறது என்கிறார்கள். இது கொகேயின், ஹெரோயின் போன்ற போதைப் பொருட்கள் தமக்கு எம்மை அடிமையாக்குவதற்கு ஒத்ததாகும்.

பல வாரங்களுக்கு அத்தகைய குப்பை உணவுகளை அளவுகணக்கின்றி உண்பதால் மூளையில் உள்ள இன்ப மையங்கள் (pleasure centers) அவற்றிற்கு இசைவாகி மேலும்மேலும் மகிழ்ச்சிக்கான உணவையே நாடும்.

கருவிலும் பாதிக்க ஆரம்பிக்கிறது

இத்தகைய குணமானது வளர்ந்த மனிதர்களை மாத்திரம் பாதிக்கிறது என எண்ணிவிடாதீர்கள். கர்ப்பமாயிருக்கும் தாய் இவ்வாறான தவறான உணவுப் பழக்கத்தில் மூழ்கி இருந்தால் கருவில் வளரும் குழந்தைகள் பிறந்த பின்னர் இத்தகைய தவறான உணவுப் பழக்கத்தையே நாடும் என 2007ல் British Journal of Nutrition செய்த ஆய்வு கூறுகிறது.

அவசரத் தீனிகள்

இத்தகைய குப்பை உணவுகளின் தாயகம் கடை உணவுகள்தான். பெரும்பாலான உடனடியாக உண்ணும்படி வாங்கும் உணவுகள் இத்தகையவை. அவசர உணவுகள்,  திடீர் உணவுகள் (Fast foods) என்றெல்லாம் அழைக்கிறார்கள். வசதியான உணவுகள் convenience foods என்ற மற்றொரு பதமும் உண்டு.

அவசரத் தீனிகள் ஏன்? 


 இதற்குக் காரணம் இன்றைய வாழ்வானது அவசரமும் இயந்திர மயமும் ஆகிவிட்டது.

இத்தகைய உணவுகள்
  • உடனடியாகக் கிடைப்பது மாத்திரமின்றி, 
  • அதிக விலையுமற்றவை. 
  • இதனால் அனைத்துத் தரத்தினரையும் ஒருங்கு சேர அழைக்கிறது. 
  • இவற்றில் விலை குறைந்த கொழுப்பு இனிப்பு, உப்பு, தவிடு நீக்கபட்ட தானியங்கள் அல்லது அவற்றின் மா ஆகியவையே அடங்கும். 
  • ஆனால் சற்று விலை அதிகமான பொருட்களான போஷனைப் பொருட்களான பழ வகைகள், காய்கறிவகைகள், கொழுப்பற்ற இறைச்சி வகைகள் இருப்பது குறைவு.
இவற்றைத் தடுக்க இந்த நவீன உணவுப் பிரமிட் என்ன சொல்கிறது என்பதையும் பாருங்களேன். தெளிவாப் படிக்க மேலே கிளிக் பண்ணுங்கள்.


புதிய உணவுப் பிரமிட்டானது உணவு வகைகளைப் பற்றிக் குறிப்பிடுவதுடன் நின்று விடாது தினசரி உடற் பயிற்சி அல்லது உடல் உழைப்பு வேண்டும் என்கிறது.

வளர்ந்தவர்களுக்கு தினசரி 30 நிமிடங்களும், வளரும் குழந்தைகளுக்கு 60 நிமிடங்களும் என்பதை வலியுறுத்துகிறது.

எடையைக் குறைக்க விரும்புவர்களுக்கும் குறைந்த எடை மீண்டும் ஏறக் கூடாது எனத் தடுப்பதற்கும் இது 90 நிமிடங்களாகும்.

நோய்களை விதைக்கிறது

இத்தகைய உணவு முறைகளால் இன்று பலரும் அதீத எடை கொண்ட குண்டு மனிதர்களாக மாறி வருகின்றனர்.

ஒருவரது எடை எவ்வளவாக இருக்க வேண்டும். அவரது உயரத்திற்கு ஏற்பவே எடை இருக்க வேண்டும். இது ஆங்கிலத்தில் Body mass index எனப்படுகிறது. சுருக்கமாக BMI என்பார்கள் அதையே தமிழில் இப்பொழுது உடல் நிறை குறியீட்டெண் என அழைக்கிறார்கள். ஒருவருடைய உயரத்தின் அடிப்படையில் ஆரோக்கியமான உடல் எடையை மதிப்பிடுவதற்கு இக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

உங்களது  BMI எவ்வளவு?

உங்களது  BMI யை அறிவது எப்படி? உங்களது எடையை கிலோகிறாமில் அளந்து அதை மீற்றரிலான உங்கள் உயரத்தின் வர்க்கத்தால் பிரிப்பதாகும். இந்த இடியப்பச் சிக்கல் எனக்குப் புரியவில்லை என்பவர்களுக்கு வழி சொல்கிறேன்.

இந்த இணைப்பிற்குச் சென்று நீங்களே சுலபமாக அறிந்து கொள்ளலாம்


இது இலங்கை இந்தியா போன்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கானது. இலங்கை அரசின் சுகாதரத்துறை அமைச்சினால் வெளியிட்ப்பட்டுள்ளது.
உங்களது உயரத்திற்கு ஏற்றதா? அதிகமா? குறைவா என்பதைத் தருவதுடன் உங்களது உயரத்திற்கு எந்தளவு எடை இருப்பது நல்லது என்பதையும் அறிவுறுத்துகிறது.


நவீன உலகின் உயிர்கொல்லி நோய்களாக
  • நீரிழிவு, 
  • இருதய நோய்கள், 
  • உயர் இரத்த அழுத்தம், 
  • புற்று நோய்கள் 
ஆகியவை இனங்காணப்பட்டுள்ளன.

இவை தொற்று நோய்களை விட வேகமாகப் பரவி கணக்கிலடங்காத உயிர்களைக் காவு கொள்வதற்கு முக்கிய காரணம் இத்தகைய போஷாக்கற்ற உணவு முறைகளே. அவற்றுடன் உடலுழைப்பற்ற வாழ்க்கை முறையும், மாசடைந்த சூழலும் காரணங்களாகின்றன என்பதையும் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.

உடல் ஆரோக்கியமாக எவ்வளவு உண்ண வேண்டும்.


அதற்கு எவ்வளவு உண்ண வேண்டும்?


அதாவது எமது தினசரி கலோரித் தேவை எவ்வளவு என்பதைக் கண்டறிய இந்த இணைப்பைக் கிளிக் பண்ணுங்கள்

உங்கள் தினசரி கலோரித் தேவை எவ்வளவு

அதெல்லாம் சரி! ஆரோக்கியமான உணவுகள் எவை என்று சொல்லவில்லையே எனக் கேட்கிறீர்களா? whfoods.com இவற்றைப் பட்டியலிடுகிறது.



என்ன இவற்றில் சில எங்கள் நாட்டிற்குக் கிடைக்காதா என்கிறீர்களா? உண்மைதான். இருந்தாலும் இங்கு கிடைக்கும் பல வகை உணவுகளையும் சொல்கிறதே. அவற்றைப் பயன்படுத்திப் பலன் பெறலாமே.

மாதேவி

0.0.0.0.0.0