Wednesday, March 30, 2011

கரணைக்கிழங்கு பொரித்த குழம்பு

கரணை

Discoreaceae  குடும்பத்தைச் சேர்ந்தது. பலநாடுகளிலும் பல்வேறு இனங்களில் பயிரிடப் பட்டு வருகிறது.இவற்றில் 200 க்கு மேற்பட்ட இனங்கள் இருக்கின்றன என்கிறார்கள்.


இலங்கையில் சட்டிக் கரணை அல்லது கரணைக்கிழங்கு எனவும் அழைப்பார்கள். இந்தியாவில் சேனைக்கிழங்கு என்கிறார்கள். மேல்தோல் மண்நிறத்தில் இருக்கும்.

ஆங்கிலப் பெயர் Elephant foot yam. யானையின் பாதம் போல பெரியதாக, சொரசொரப்பாக,  சட்டியை  போலவும், தோற்றமளிப்பதால் யானைப் பாதக்கிழங்கு Elephant foot yam.என அவர்களும் சட்டிக்கரணை என நாமும் அழைப்பது பொருத்தம் போலவே தோன்றுகிறது.

மரவள்ளி. வத்தாளை, மோதகவள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு. இராசவள்ளிக் கிழங்கு, சிறுவள்ளிக் கிழங்கு போல இதுவும் ஒருவகை.   மஞ்சள் பயிரிடப் பட்ட தோட்டங்களில் வரம்பில் சேனை பயிரிட்டு இரட்டிப்புப் பலன் பெறலாம். இரண்டின் காலமும் ஒரேஅளவானது என்கிறார்கள். 


பயிரிடப் பட்டு 8 - 10 மாதங்களில் பலன் கொடுக்கும். சிறப்பான விடயம் விளைந்தபின் 6 மாதங்கள் வரை சேமித்து வைத்து உபயோகிக்க முடியும். மழைக்காலத்திற்கு வாங்கி வைத்துக்கொள்ளலாம். தோல் கடிக்கும் தன்மையுடையது.

முதன்முதல் ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் பயிரிடப் பட்டது என்கிறார்கள். மேற்கிந்திய பசுபிக் தீவுகளிலும் பயிரிடப் படுகிறது. காபோவைதரேற் அதிகமுள்ள உணவு இது. நார்ப் பொருள், பொற்றாசியம், மக்னீசியம், விற்றமின் சி அடங்கியுள்ளது. கொழுப்பு குறைந்த உணவு என்பதால் நல்லஉணவு. கொலஸ்ரோலைக் கட்டுப் படுத்தும் உடல்எடையையும் அதிகரிக்காமல் தடுக்கும்.

இன்று கரணைக்கிழங்கு பொரித்த குழம்பு செய்யலாம். எண்ணை தவிர்க்க விரும்புவோர் அவித்தெடுத்து சமைத்தபின் எலுமிச்சம் சாறு விட்டுப் பிரட்டுங்கள்.

இக்கிழங்கில் சிப்ஸ், தேங்காய்ப் பால் பிரட்டல், கூட்டு, அவியல், பொரியல், வறுவல், பொடிமாஸ், புட்டு, சாப்ஸ், கட்லட், வடை, எனப் பலவும் செய்து கொள்ளலாம்.



கரணைக்கிழங்கு பொரித்த குழம்பு

தேவையான பொருட்கள் -

கரணைக்கிழங்கு – 1/2 கிலோ
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
பூண்டு – 4
வெந்தயம் - ½ ரீஸ்பூன்
கடுகு – ¼ ரீஸ்பூன்
கறிவேற்பிலை – 2 இலைகள்.
மிளகாய்ப் பொடி – 1 ரீஸ்பூன்
தனியாப் பொடி - 1 ரீஸ்பூன்
சீரகப்பொடி  - ½ ரீஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ ரீஸ்பூன்
தேங்காய்ப் பால் - 2 டேபல் ஸ்பூன்

வறுத்து பொடித்து எடுக்க – கறுவா, சோம்பு, கராம்பு
பொரிக்க எண்ணை - 4 -5 டேபல் ஸ்பூன்
புளி – தேவைக்கு
உப்பு - தேவைக்கு
தண்ணி – ½ கப்.

கிழங்கு கடிக்கும்!
பல்லு இருக்கா என்று கேட்காதீர்கள்.

சொரசொரப்பு என்பதால் கிளவுஸ் போட்டு கிழங்கின் தோலை சீவி எடுங்கள். துண்டங்களாக வெட்டி நன்கு கழுவி எடுங்கள்.
மெல்லிய சிறுதுண்டுகளாக வெட்டுங்கள்.

இதன் பின் கிளவுஸ் களட்டிக்கொள்ளலாம்.
கையில் எலுமிச்சம் புளி அல்லது எண்ணை தடவியும் வெட்டலாம்.

வெங்காயம்,பூண்டு சிறியதாக வெட்டுங்கள். மிளகாயை கீறிவையுங்கள்.

வெறும் தாச்சியில் வறுக்க வேண்டியதை வறுத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள்.
பொரிக்கும் எண்ணையை விட்டு வெட்டிய கிழங்குகளைப் போட்டு மெல்லிய ப்ரவுண் நிறத்தில் பொரித்தெடுத்து வடிய வையுங்கள்.

சிறிது ஒயிலில் கடுகு தாளித்து, பூண்டு, வெங்காயம்,பச்சை மிளகாய் கறிவேற்பிலை தாளித்து இறுதியில் வெந்தயம் சேர்த்து சிவத்ததும் இறக்கி பிரஷர் குக்கரில் கொட்டுங்கள்.

பொரித்த கிழங்கு, பொடிகள், உப்பு, புளி, தண்ணி, தேங்காய்ப் பால் அனைத்தையும் விட்டு கலக்கி மூடிபோட்டு 3 விசில் வைத்து விடுங்கள்.

பொரித்த வாசத்துடன் குழம்பு மூடி திறக்க முன்பே கமகமக்கும்.
ஆற எடுத்து பரிமாறும் கோப்பையில் விடுங்கள். நன்கு அவிந்த மிகவும் மெதுவான கரணைக்கிழங்குக் குழம்பு விரைவில் காலியாகிவிடும.

(கிழங்கு பிஞ்சாக இருந்தால் பொரித்தபின் குழம்பை பிரஷர்குக்கரில் வையுங்கள். முற்றிய கிழங்கு என்றால்பொரித்த பின் பாத்திரத்தில் வைத்தும் எடுக்கலாம்.)


காரகுழம்புடன் சுவைசோ்க்க இனிப்பு பூசணி, இரும்புச்சத்துக்கு இலைப் பொரியல், ரசம் அல்லது மோருடன் சாப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

Wednesday, March 9, 2011

சின்னுவின் ஹொஸ்டல் சமையல்- ரவை கேசரி

அடைக்கலம் குருவிக் குஞ்சுகளாய் அணைப்பில் வளர்ந்து, சிறகு முளைத்ததும்  சிட்டுக் குருவிகளாய் வீட்டினுள் சிறகடித்துப் பறந்து திரிந்த காலங்கள் இனியவை.


காலம் மாற, சிறகு விரித்து வானத்தையும் வெற்றி கொள்ளப் பறக்கும் காலம் வந்ததும், உறவுகளைப் பிரிந்து இருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் வரத்தானே செய்யும்.

பலருக்கும் வந்தது. எங்கள் வீட்டிலும் வந்தபின்தான் புரிந்தது.

“மம்மி டடி நான் சமாளிப்பேன். என்னை விட்டிட்டு இருப்பீர்களா? தனிய என்ன செய்வீர்கள்?” கேள்விகள் வந்தன. பல மாறுவேடங்களிலும் கேள்விகள் வந்தன.


நான் குடும்பத்தை விட்டுப் பிரிந்து ஹொஸ்ரல் வாழ்க்கை வாழ்ந்தவளல்ல. சின்னுவின் கேள்விகளால் என்னை நானே தயார்படுத்திக் கொண்டேன்.

ஆரம்பத்தில் தினந்தோறும் தொலைபேசி,குறுந்தகவல்கள் எனப் பறந்த வண்ணம் நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவளின் படிப்பை குழப்பக்கூடாது என்பதற்காக நாளடைவில் தினந்தோறும் என்பதைக் கட்டுப் படுத்திக் கொண்டேன்.

எப்பொழுது விடுமுறை வரும் என ஆவலுடன் காத்திருப்போம்.  

உறவுகளைப் பிரிந்து இருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் வரும்போது அப் புதிய சூழலுக்கு தம்மை மாற்றிக்கொள்வது என்பது சிலருக்கு இலகுவாகவும் பலருக்குத் துயரமாகவும் மாறிவிடுவதுண்டு.

இவ்வகையில் சவாலுடன் தன்னைத்தானே கொண்டு நடத்தி பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து தீர்மானங்கள் எடுத்து நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கும் இவர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள் தான்.

உங்கள் வாழ்க்கையிலும் வந்திருக்கலாம் இனிமேலும் வரலாம்.

எங்களுக்கு வந்தது.


ஓரிரு பாத்திரங்களுடன் சமையல் செய்வது இலகுவானதல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். அதுவும் ஹொஸ்டலில் பொதுவான கிச்சனில். நாலுஅடுப்புக்கள் கூடிய எலெக்ரிக் குக்கரில் இருபத்தைந்து பெயர் சமையலைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

சமையல் என்பது கிரிக்கற் மச்சில் பந்தைப் பிடிக்க ஓடும் ஓட்டம்தான்.

முதல்கட்டம் சமையலுக்கு தயாராகுமுன் கூடையில் சமைக்கும்பொருட்கள், பாத்திரங்கள் யாவற்றையும் மறக்காமல் எடுத்துவைக்க வேண்டும்.

அடுத்து கிச்சனில் அடுப்பு பிரீயாக இருக்கிறதா எனப் போய்பார்க்க வேண்டும். ப்ரியாக இருந்தால் உடனே விரைந்து சென்று கூடையை எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். சற்றுத் தாமதமானால் அடுப்பில் வேறொருவர் தனது பாத்திரத்திற்கு முடி சூட்டிவிடுவார். 

ப்ரியாக இல்லாவிட்டால் சமைத்துக் கொண்டிருப்பவர்களிடம்; சொல்லி அடுப்பு முன்பதிவு செய்துவைக்க வேண்டும். அடிக்கடி சென்று ப்ரீயாகிவிட்டதா எனப் பார்த்தும் வர வேண்டும்.

பானில் தண்ணீரைப் பிடித்துக் கொடுத்து அடுப்பில் வைக்கச் சொல்லிவிடுவார்கள். எல்லாம் ரன் அவுட் ஆனபின் வந்த எக்ஸ் பீரியன்ஸ்தான்.  இப்பொழுதெல்லாம் சிக்ஸர் அடிக்க தருணத்தில்  மொபைலில் அழைத்துக் கொள்கிறார்கள்.

இப்படியாக சிரமத்தின் மத்தியில் தயாரிக்கும் உணவுகள்தான் இவை.

கூடையில் ஏதாவது பொருட்கள் வைக்க மறந்து அறையில்சென்று எடுத்துவர நேர்ந்தால் கூடையில் உள்ள எண்ணைப்போத்தல் அல்லது முக்கியமான பொருள் கால் முளைத்து யார் கூடவோ ஓடிப்போயிருக்கும்.

சிலநேரங்களில் பாத்திரங்களும் சுடப்பட்டு புது அறைக்கு குடிபோயிருக்கும். அன்று சமையல் அம்போ ஹோட்டல் சாப்பாடுதான் கிடைக்கும். 

வீட்டில் ஒம்லட் தவிர வேறு எதுவுமே செய்யத் தெரிந்திராதவள் சின்னு…? 

சிறுபிள்ளை என நாமே எல்லாவற்றையும் செய்து கொடுத்து விடுவோமே பிறகு எப்படி அவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள். 


இப்பொழுது படிப்பு, சமையல், வோசிங், கிளீனிங் என சகலதிலும் அசத்துகிறாள்.

ஐ ஆம் வெரி ப்ரவுட் ஆப் மை டியர் சின்னு.

சின்னு தனது சமையல் படங்கள்  அனுப்பி இருந்தாள். அவளின் ஹொஸ்ரல் சமையல் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். பச்சலஸ்களுக்கும் உதவியாக இருக்கும்.

இனிப்புடன் ஆரம்பிப்போம். அனைவருக்கும் தெரிந்ததுதான். ஹொஸ்டல் இனிப்பு  அமிர்தம்தான்.

ரவை கேசரி படைப்போம்.

தேவையானவை

ரவை – 1 கப்
தண்ணி – 1 கப்
பால் - 1 கப்
சீனி – 1 ½ கப்
நெய் அல்லது மாஜரின் - 4 மேசைக்கரண்டி
கலர் பவுடர் அல்லது கலரிங் சிறிதளவு
ஏலம் அல்லது வனிலா சிறிதளவு
உப்பு சிறிதளவு
சாப்பிட்டு மிஞ்சிய பாதாம் அல்லது முந்திரி சிறிதளவு
பிரிச்சில்  கிடந்த ஜெலி.

செய்வோம்

1 டேபல் ஸ்பூன் நெய்யில் பிளம்ஸ் முந்திரி இருந்தால் வறுத்து எடுங்கள். அதே தாச்சியில் லேசாக ரவையை வறுத்து எடுத்து வையுங்கள்.

அதே பாத்திரத்தில் பால் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடுங்கள் கலர் பவுடர் சேருங்கள்.

கொதித்துவர ரவையை சேர்த்து கிளறி சற்று வேக விடுங்கள்.
சீனி, உப்பு  கலந்து இறுக வனிலா மாஜரின் விட்டு கிளறி இறக்குங்கள்.

சட்டியுடன் தொலையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பிரிச்சில் இருந்து எடுத்த ஜெலி பாதாம் மேலே வைத்துச் சாப்பிடுங்கள். உங்கள் நெருங்கிய நண்பிகளுக்குக் கொடுங்கள். மிகுதியை பிரிஜ்ஜில் ஒளித்து வைத்துவிடுங்கள் நாளை பசிக்கும்போது சாப்பிட்டுக் கொள்ளலாம்.

சின்னு.