Monday, September 28, 2009

தூதுவளை இலைக் குழம்பு

மூலிகை மருத்துவத்தில் தூதுவளைக்கும் முக்கியமான பங்கு உண்டு. இருமல், சளி, தொண்டை நோவுக்கு இலைகளை அவித்து எடுத்து கைமருந்தாகக் குடிப்பர். (சமையறை மருத்துவம் பதிவில் பார்க்கவும்).

இது ஈரலிப்பான இடங்களில் கொடியாகப் படரும் தன்மையுடைய ஒரு செடியாகும். இலங்கை, இந்தியா, மலேசியா போன்ற ஆசிய நாடுகளில் பெருமளவு காணப்படுகிறது.


கிராமப்புறங்களில் பெரும்பாலும் சமையலில் அடிக்கடி இடம் பிடித்துக் கொள்ளும். இச்செடியின் பூக்கள் நீல (ஊதா) நிறத்தில் இருக்கும். பூவின் நிறம் எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் தன்மையுடையது.



கொடியிலும் இலையிலும் முட்கள் காணப்படும்.

அதனால் இதன் இலைகளைப் பறித்து எடுப்பது சிரமமான காரியம்தான்.

இச்செடியை ஆங்கிலத்தில் Purple Fruited Pea Eggplant என அழைப்பர். இதனது தாவரவியல் பெயரானது Botanical name: Solanum trilobatum ஆகும். இது Solanaceae (Potato family) குடும்பத்தைச் சேர்ந்தது.


வீட்டுத் தோட்டங்களில் இயற்கையாக முளைத்து நின்று பயன்கொடுக்கும்.

பெரும்பாலும் சம்பல் (சட்னியாக) அரைத்து எடுத்து உண்பார்கள்.


அதன் காய்கள் கசப்பானவை. காய்களை வெயிலில் உலர்த்தி வற்றலாக்கி எடுத்து, கசப்பு நீங்க நெய்யில் பொரித்து எடுத்து உண்பார்கள்.

வெளிர்ப் பச்சைக் காய்கள் பழுக்கும்போது கண்ணைக் கவரும் சிவப்பு நிறமாக மாறும்.

இலையில் ரசம், பாற்சொதி, சூப் என்பனவும் தயாரிக்கலாம்.

இலையைப் பொரித்து எடுத்து பொரியலாகவும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இன்று குழம்பு தயாரித்துக் கொள்ளுவோம்.

தூதுவளை இலைக் குழம்பு

குழம்பு தடித்து வருவதற்காக வாழைக்காய் அல்லது கிழங்கு சேர்த்துக் கொண்டால் சுவையும் கூடும். அல்லது வெங்காயம், பூண்டு கூடியளவு சேர்த்து செய்து கொள்ளலாம்.

கையில் முள் குத்தாதவாறு மிகவும் கவனமாக கையாளுங்கள்.

வேண்டியவை



1. தூதுவளை இலை – 2 கப்
2. வாழைக்காய் அல்லது கிழங்கு – 1
3. பூண்டு – 5 பல்லு
4. பம்பாய் வெங்காயம் - 1
5. பச்சை மிளகாய் - 1
6. தேங்காய்ப்பால் - ¼ கப்
7. கடுகு – சிறிதளவு
8. வெந்தயம் - 1 ரீஸ்பூன்
9. எண்ணை – ¼ லீட்டர்
10. மிளகாய்ப் பொடி - 2 ரீஸ்பூன்
11. தனியா பொடி - 1 ரீஸ்பூன்
12. மஞ்சள்பொடி – சிறிதளவு
13. உப்பு தேவைக்கு எற்ப
14. புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு

செய்து கொள்வோம்

இலையை பாதியாக மடித்து வெளிப்புறத் தண்டை முள்ளுடன் கிழித்து எடுத்துவிடுங்கள். (கத்தரிக்கோல் உபயோகித்து வெட்டிக் கொள்ளலாம்)

பின்பு இலையைக் கழுவி நன்கு நீர் வடிய விட்டுவிடுங்கள்.

வாழைக்காயை சிறிய துண்டங்களாக வெட்டுங்கள்.

வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் தனித்தனியாக வெட்டி வையுங்கள்.

ஒன்றரைக் கப் நீரில் புளியைக் கரைத்து வையுங்கள்.

எண்ணையை விட்டு கொதிக்க, வாழைக்காயை பொரித்து எடுத்து வையுங்கள்.

இலையையும், பொரித்து எடுத்து பேப்பர் ரிசூவில் போடுங்கள்.

சிறிதளவு எண்ணையில் கடுகு, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் என்ற நிரையில் தாளித்து இறுதியாக வெந்தயம் சேர்த்து, புளிக் கரைசல் விடுங்கள்.

இத்துடன் மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, மஞ்சள், உப்பு சேர்த்து வாழைக்காய், பொரித்த இலை சேர்த்து கொதிக்க விடுங்கள்.

ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு நன்கு கொதித்து வர இறக்கி வையுங்கள்.

பொரித்த இலை வாசத்துடன் குழம்பு கமழும்.

பூண்டு வெங்காய வாசமும் தூக்கி நிற்கும்.

சாதம், பிட்டு, இடியாப்பம், பிரட்டுக்கு இக் குழம்பு சுவை கொடுக்கும்.

மாதேவி

Wednesday, September 9, 2009

சரக்குத் தண்ணி - பத்திய உணவு

கொப்பாட்டியின் கொப்பாட்டி காலத்திற்கு முந்திய பாரம்பாரிய உணவு இது எனலாம். பழைய காலம் முதல் பத்தியச் சாப்பாடாக உண்ணபட்டு வருகிறது.

குழந்தைகள் பெற்ற தாய்மாருக்கும், பெண்கள் பூப்படைந்த வேளைகளிலும், சத்திரசிகிச்சைகள் செய்த பின்பு நோயாளர்களுக்கும், ஏனையோர் பேதி அருந்திய காலத்திலும், தடிமன் காய்ச்சல் வந்த பொழுதுகளிலும் உண்பதற்குக் கொடுப்பார்கள்.

நாட்டரிசிச் சாதத்தை குளையக் காய்ச்சி எடுத்து இக் கறியையும் சேர்த்து சாப்பிடக் கொடுப்பது வழக்கம். நோயாளர்களுக்கு ஓரிரு வாரம் தொடரும். தாய்மாருக்கு ஒரு மாதத்திற்கு இதுதான் உணவு. வேறு உணவுகள் கொடுக்க மாட்டார்கள்.

இப்பொழுது காலம் மாறிவிட்டது.

நோயுற்ற வேளைகளில் காரக் குழம்பு வகைகளை உண்பது உடலுக்கு ஏற்றதல்ல எனக் கருதி மல்லி, சீரகம், மிளகு, சேர்ந்த காரம் குறைந்த எண்ணையற்ற உணவை உண்பதால் விரைவில் உணவு சமிபாடடையும் எனக் கூறினர்.

அவ்வாறு தோன்றிய கறிதான் இது.

நோயாளர்களைப் பார்வையிடச் செல்வோர் முதலில் கேட்பது 'பத்தியம் கொடுக்கத் தொடங்கிவிட்டீர்களா?' என்றுதான்.

காயம் எனக் கூறி மசாலாக்களைக் கட்டியாக அரைத்து எடுத்து உருட்டி சாப்பிடக் கொடுப்பதும் உண்டு.

இரண்டு பல்லு பூண்டை தோலுடன் வறுத்தெடுத்து, வெல்லத்துடன் சாப்பிடக் கொடுப்பர். உண்பதால் அழுக்குகள், வாயுக்கள் நீங்கும் என்பார்கள்.

இடத்திற்கு இடம் சேர்க்கும் சரக்குகளில்; மாறுதல்கள் உண்டு.

சிலர் மசாலாக்களுடன் சாரணைக் கிழங்கும் சேர்த்து அரைத்து எடுப்பர். அம்மிக் கல்லுகள் பாவனையில் இருந்த காலம் மதிய வேளைகளில் கல்லின் உருளும் ஓசையைக் கேட்டாலே அயல் வீடுகளுக்கெல்லாம் தெரிந்துவிடும் பத்திய உணவு தயாராகிறது என்று.

மசாலாக்களை மிகவும் பசையாக நீண்ட நேரம் இடுப்பும் கையும் ஒடிய குழவியை இழுத்து உருட்டி உருட்டி அரைத்து எடுப்பார்கள். நோயாளர்களின் உடல் நலனுக்கு ஏற்ப தேங்காய் சேர்த்தோ தேங்காய் இல்லாது சரக்கை மட்டும் அரைத்தெடுத்து கறி செய்து கொள்வார்கள்.

இப்பொழுது மிக்ஸி மூலம் இலகுவாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம். இருந்தும் இவ்வகை உணவு முறைகள் மிகவும் அரிதாகவே சமைக்கப்படுகின்றன.

இப்பொழுது மருத்துவர்களும் நோயளர்களுக்கு சரக்கைத் தவிர்த்து சாதாரண போஸாக்கான உணவுகளை உண்ணுமாறு அறிவுறுத்துகின்றனர்.

சாதாரண நாட்களில் ஒரு மாறுதலுக்கு இவ்வகை உணவுகளை செய்து உண்ணலாம்.

உப்புப் புளியை பக்குவமாக இட்டு செய்யும் சரக்குக் கறியின் சுவை சொல்லி மாளாது.

மாமிசம் சாப்பிடுவோர் சின்ன மீன்களான ஓரா, விளைமீன், பால்ச்சுறா போன்ற விரும்பிய ஏதாவதில் அரைத்த கூட்டை இட்டு சமைத்துக் கொள்ளலாம்.

கருவாடு விரும்புவோர் பாரைக் கருவாட்டுக் கறியிலும் கலந்து கொள்ளலாம்.

இறைச்சி விரும்பி உண்போர் சிறிய 'விராத்துக் கோழி' எனக் கூறப்படும் கோழிக் குஞ்சுக் கறியிலும் கலந்து பத்திய உணவாகச் செய்து கொள்வார்கள்.


செய்து கொள்ளத் தேவையானவை

முருங்கைக்காய் - அளவான பிஞ்சு 2
கத்தரிப் பிஞ்சு – 2
பிஞ்சு வாழைக்காய் - 1
சாம்பார் வெங்காயம் -10
பச்சை மிளகாய் - 1
உப்பு தேவைக்கு ஏற்ப
கறிவேற்பிலை – 2 இலை

அரைத்து எடுக்க

மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 ரீ ஸ்பூன்
சுட்டு எடுத்த செத்தல் - 2
சீரகம் - 1 ரீ ஸ்பூன்
வேர்க்கொம்பு 1 துண்டு
மஞ்சள் - சிறு துண்டு
பூண்டு – 5 – 6
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
புளி அல்லது எலுமிச்சம் சாறு – தேவைக்கு ஏற்ப

செய்முறை

முதலில் அரைத்து எடுக்கும் மசாலாக்களை சிறிது நீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

தேங்காய்த் துருவலை பசையாக அரைத்து எடுத்து வையுங்கள்.

பழப்புளி விடுவதாக இருந்தால் புளியைக் கரைத்து வையுங்கள்.

முருங்கக்காயை விரலளவு துண்டுகளாக வெட்டி இடையே கீறி வையுங்கள்.

கத்தரி, வாழைக்காயை தண்ணீரில் இரண்டங்குல நீள் துண்டுகளாக வெட்டி வையுங்கள்.

வெங்காயம் நீளவாட்டில் இரண்டு மூன்றாக வெட்டிவிடுங்கள்.

மிளகாயை இரண்டு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

காய்களை உப்பு சேர்த்து இரண்டுகப் தண்ணீரில் மூடி போட்டு ஐந்து நிமிடம் அவித்து எடுங்கள். (முன்பு அம்மி கழுவிய நீரில் அவிய விடுவார்கள்.)

பின் திறந்து பிரட்டி அரைத்த மசாலாக் கூட்டைப் போட்டு வெட்டிய வெங்காயம், மிளகாய், கறிவேற்பிலை சேர்த்து மூடிவிடுங்கள்.

இரண்டு நிமிடத்தின் பின்பு திறந்து காய்களைப் பிரட்டி புளிக் கரைசல் விட்டு தேங்காய்க் கூட்டுப் போட்டு கொதிக்க விடுங்கள்.


நன்கு கொதித்து கறி தடித்துவர இறக்கிக் கொள்ளுங்கள். மல்லி, சீரகம்,தேங்காய் கூட்டுடன் சரக்குத்தண்ணி கொதித்த வாசனை ஊரெல்லாம் கூட்ட கறி தயார்.

புளிக்குப் பதில் எலும்மிச்சம் சாறு விடுவதாக இருந்தால் இறக்கிய பின்னர் விட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.

சாதம் இடியப்பத்திற்கு சுவை தரும்.

மாதேவி